இது போட்டியா? போரா? சம்பியன்ஸ் கிண்ணம் 2017 – இறுதிப்போட்டி – வெற்றி யாருக்கு?

0
108

– A.R.V.லோஷன்

இந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த கோலாகலக் கிரிக்கெட் திருவிழா யாரும் எதிர்பாராத, ஆனால் பலரும் விரும்பிய ஒரு உச்சபட்ச இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்தியா எதிர் பாகிஸ்தான்

இன்றைய (ஞாயிறு) இறுதிப்போட்டி கிரிக்கெட் தாண்டிய ஒரு யுத்தம்.
அரசியல் பின்னணியும் சில ஆண்டுகளுக்கு முன்னதான இவ்விரு அணிகளுக்கும் இடையிலே இடம்பெற்ற விறுவிறு போட்டிகள் காரணமாக மிகப் பரபரப்பான எதிர்பார்ப்பு தானே ஏற்பட்டுவிடுவது வழமை.

அண்மைய வருடங்களாக இவ்விரு அணிகளும் ICC யினால் நடத்தப்படும் முக்கியமான கிரிக்கெட் தொடர்களில் தவறாமல் சந்தித்து வந்தாலும் அவை பொதுவாக லீக் (முதற்சுற்றுப்) போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன.

இந்திய அணியின் அண்மைக்கால எழுச்சிக்கு சமாந்தரமாக பாகிஸ்தானிய அணியின் சரிவும், குழப்பங்களும் இந்தியாவோடு மோதபாகிஸ்தானுக்கு வாய்ப்பை வழங்கவில்லை எனலாம்.

2007 உலக T20 கிண்ணத்துக்குப் பின்னர் முதல் தடவையாக இவ்விரு அணிகளுக்கும் இடையே ஒரு முக்கிய தொடரின் இறுதிப்போட்டி.
(2011 உலகக்கிண்ணப் போட்டியின் அரையிறுதி இன்றைய போட்டிக்கு முன்னதான இன்னொரு முக்கிய போட்டியாக அமைந்திருந்தது)

கிரிக்கெட்டின் மிகப்பெரும் இரு எதிரிகளாக அரசியல் -எல்லை பிரச்சினை காரணமாக மாற்றப்பட்டுள்ள இவ்விரு அணிகளும் தம்மிடையே மோதிய 128 போட்டிகளில் 72 தடவை பாகிஸ்தானும் 52 தடவை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. (4 போட்டிகள் முடிவில்லை)

எனினும் ICC தொடர்களில் 8 க்கு 2 என்னும் கணக்கில் இந்தியா முன்னிலை பெறுகிறது.
(T 20 போட்டிகளையும் சேர்க்கையில் அது 13 -2 என மாறுகிறது)
ஆனால் (ஷார்ஜா போட்டிகளின் கைங்கர்யத்தில்) ஒரு நாள் போட்டிகளின் இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் 7 போட்டிகளையும் இந்தியா 3 போட்டிகளையும் வென்றுள்ளன.

18 நாட்களில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தற்போதைய மிகச்சிறந்த 8 அணிகள் மோதிய இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தர நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தற்போதைய நடப்புச் சம்பியன்களான இந்தியா வருவது ஆச்சரியமில்லை.
எனினும் பாகிஸ்தான் 8 ஆம் இடத்தோடு மிகத் தட்டுத் தடுமாறியே உள் நுழைந்தது.
இப்போது இலங்கையைப் பின் தள்ளி ஏழாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் ஆறாம் இடத்துக்கு உயரும்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு அதிக தடவை (4) தெரிவாகியுள்ள பெருமை கொண்டுள்ள இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு தடவை கிண்ணம் வென்றுள்ள அவுஸ்திரேலியாவின் (2006, 2009) சாதனையை நிகர்க்கக்கூடிய வாய்ப்பும்,மூன்றாவது கிண்ணத்தைத் தனதாக்கக்கூடிய சந்தர்ப்பமும் வாய்க்கவுள்ளது.

பாகிஸ்தானுக்கு இதுவே சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது இறுதிப்போட்டி.

முதலாவது போட்டியில் எந்த அணியை சந்தித்ததோ அதே அணியையே இறுதிப் போட்டியில் சந்திக்கிறது. எனினும் முன்னரை விட உறுதியாகவும் நம்பிக்கையுடனும்.
தென் ஆபிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளையும் தோற்கடித்து திடமான அணியாக மாறியிருக்கிறது.அதிலும் இம்முறை கிண்ணம் வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்த இங்கிலாந்தை பாகிஸ்தான் இலகுவாகத் தோற்கடித்த விதம் கொஞ்சம் பிரமிப்புடன் நோக்க வைக்கிறது.

எனினும் முக்கியமான தருணங்களில் தாங்களாகவே தோற்றுவிடும் இயல்பும், வெல்லப் போகிறார்கள் என நம்பியிருக்கும் வேளைகளில் நம்பமுடியாத மாதிரி தோற்பதும் பாகிஸ்தானிய அணியின் தீவிர ரசிகர்களே பாகிஸ்தானை ஐயத்துடன் நோக்குவது வழமையானதே.
அதிலும் அண்மைக்காலமாக இந்திய அணியுடன் என்றாலே அப்படியே சரணாகதி அடைவதே வாடிக்கையாகியுள்ளது.

எனினும் இளைய தலைமுறை அணியாகத் தெரியும் இந்த அணியைத் தடுமாற்ற நிலையிலிருந்து காப்பாற்றி இலங்கை அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சப்ராஸ் அஹமட் நம்பிக்கை தருகிறார்.
பந்துவீச்சில் துல்லியத்தினால் தனது மூன்று வெற்றிகளையும் எட்டியுள்ள பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் தற்போது திடம்பெற்று வருகிறது.
நிதானமான அசார் அலியும் நீண்ட காலக் காத்திருப்புக்குப் பின் இந்தத் தொடரில் அறிமுகமாகி அதிரடியில் கலக்கும் ஃபக்கார் சமானும் பாகிஸ்தான் நீண்ட காலமாகத் தேடித்திருந்த உறுதியான ஆரம்ப ஜோடியாக மாறியிருப்பது ஆரோக்கியமான மாற்றம்.
குறுகிய காலத்திலேயே தன்னை நிரூபித்துள்ள பபார் அசாம், அனுபவம் வாய்ந்த ஹபீஸ், ஷோயிப் மாலிக், இவர்களோடு சப்ராஸின் உறுதியான துடுப்பாட்டமும் சேர்ந்துகொள்ள பாகிஸ்தான் துடுப்பாட்டம் வலிமையானதாகவே தெரிகிறது.

இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஹசன் அலியுடன், அனுபவமும் வேக அதிரடியும் சேர்ந்தவரான ஜுனைத் கானும் பாகிஸ்தானி பந்துவீச்சின் அடிப்படை. அரையிறுதியில் உபாதை காரணமாக விளையாடாத மொஹமட் அமீரும் சேர்ந்துகொள்ள பாகிஸ்தானின் பந்துவீச்சில் இந்த 30 ஓவர்களும் இந்தியாவின் புகழ்பெற்ற துடுப்பாட்ட வரிசைக்கு நிச்சயம் சவாலே.
ஓட்டங்களைப் பெறுவதில்மட்டுமில்லை விக்கெட்டுக்களை இழக்காமல் தப்பவும் அவதானமாக ஆடவேண்டி இருக்கும்.

எனினும் பாகிஸ்தானின் சுழல்பந்துவீச்சு பெரிதாக சோபிக்காத இந்தத் தொடரில் இமாத் வசீமோடு மேலதிகமாக ஒரு சுழல் பந்துவீச்சாளரா (ஷடாப் கான்) அல்லது மேலதிக வேகப்பந்து வீச்சாளரா என்பதே ஒரே குழப்பமாக இருக்கலாம்.

வழமையாக மோசமாகத் தெரியும் களத்தடுப்பும் அரையிறுதியில் சிறப்பாக செயற்பட்டது பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.
முதற்சுற்றில் கண்டா தோல்வியை இன்று இறுதிப்போட்டியில் வெற்றியாக மாற்றி கிண்ணத்தை சுவீகரிக்க இரட்டிப்பு பலத்தோடும் கவனம் சிதறாமலும் ஆடவேண்டி இருக்கும்.

ஆனால் இத்தனையும் சேர்ந்து இலங்கையுடன் கண்ட தோல்வியைத் தவிர வலிமையான அணியாகத் தெரியும் இந்தியாவுக்கு சவாலாக விளங்குமா என்பது ஒரு பெரிய கேள்வியே.

பாகிஸ்தான் பந்துவீச்சில் கலக்கும் அணி என்றால் இந்தியா துடுப்பாட்ட அணி.

இந்தத் தொடரில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள முதலிருவரும் (தவான், ரோஹித் ஷர்மா) இந்தியரே. இவர்கள் இருவருடன் இலங்கையுடன் பூஜ்ஜியம் பெற்றாலும் மற்ற மூன்று போட்டியிலும் அரைச்சதங்கள் பெற்ற அணித்தலைவர் விராட் கோலியும் அசுர ஓட்டக்குவிப்பில் இருக்கிறார்கள்.


அதற்குப் பிறகும் யுவராஜின் அதிரடியும், கிடைத்த வாய்ப்பில் ஓட்டங்கள் குவித்த தோனி , பாண்டியா, ஜாதவ் என்று இந்தியா துடுப்பாட்ட வலிமைகொண்ட அணியே தான்.

எனினும் கடந்த சில மாதங்களில் காட்டிய அதே துல்லியத்தை இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவின் பந்துவீச்சு காட்டவில்லை என்பது கோலிக்கு சற்று கிலேசத்தை வழங்கலாம். ஆனாலும் அரையிறுதியில் விளையாடிய அதே அணியே இன்றும் விளையாடும் என்று நேற்று கோலி சொல்லியிருந்தார்.

புவனேஷ் குமார், பும்ரா ஆகியோருக்கு துணையாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளரும் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டும் என்றே இந்தியா விரும்பும். ஜடேஜா ஓட்டங்களைக் கட்டுப்படுத்தினாலும் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் எடுத்துள்ளார். இங்கிலாந்து ஆடுகளங்களில் எதிர்பார்த்த அழுத்தத்தை வழங்க முடியவில்லை. கடைசியாக இரு போட்டிகளில் மட்டும் விளையாடிய அஷ்வினும் எதிர்பார்த்ததை போல பங்களாதேஷுக்கே அழுத்தத்தைச் செலுத்தவில்லை.


அத்துடன் அஷ்வினுக்கு உபாதை என்று இன்று காலை வந்த செய்தியுடன் சேர்த்து – பாகிஸ்தானுக்கு எதிரான முன்னைய போட்டியில் மிகச் சிறப்பாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய உமேஷ் யாதவ் அணிக்குள்ளே அழைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

பாகிஸ்தானிய துடுப்பாட்ட வரிசை ஜடேஜாவின் துரிதமான ஓவர்களை சமாளித்து அஷ்வின் (விளையாடினால் ), பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் வீசப்போகும் இருபது ஓவர்களைக் குறிவைப்பர் என நம்பலாம்.

ஜடேஜா, கோலி போன்ற சிலர் தவிர தடுமாறும் இந்தியக் களத்தடுப்பும் கவனிக்கக் கூடிய விஷயமே.

எனினும் இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இப்படியான ‘பெரிய’ முக்கியமான போட்டிகளின் அனுபவமும், ஒட்டுமொத்த அனுபவமும் சேர்ந்ததாக இந்தியா மீண்டும் தனது கிண்ணத்தை மீட்டுக்கொள்ளும் வாய்ப்பே சற்றுக் கூடுதலாகத் தெரிகிறது.

எனினும் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகளுக்கே உரித்தான சில நிமிடங்களில் மாற்றமடையும் திருப்பத்துக்குரிய கணங்கள் தான் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடியன.
அந்த நேரங்களில் உணர்ச்சிவயப்படுதலைக் கட்டுக்குள் கொண்டு வரும் தலைமையும் அணியும் இறுக்கமான போட்டிகளை வென்றெடுக்கும். இங்கே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு தன் சுய கட்டுப்பாட்டை இழந்துவிடும் கோலியை விடக் கொஞ்சம் பொறுமையும்கட்டுப்பாடும் மிகுந்த சப்ராஸ் தலைவராக நிமிர்கிறார்.

இலங்கையை வென்ற சப்ராஸின் துடுப்பாட்டமும், பங்களாதேஷுடனானா அரையிறுதியில் களத்தடுப்பில் கோலியின் முகபாவங்களும் இதற்க்கான சான்றுகள்.
ஆனால் கோலி இந்தக் குறைகளை தனது அட்டகாசமான துடுப்பாட்ட நேர்த்தி மூலம் கடந்துவிடுகிறார்.

இன்று போட்டி வெல்லப்படுவது 20 – 40 ஓவர்கள் வரையிலான விக்கெட் சரிவுகளும் ஓட்ட சேகரிப்புமே.
காரணம் இரு அணிகளுமே கடைசி ஓவர்களில் துடுப்பாட்ட அதிரடிகள் மூலமாக மாற்றக் கூடியவை.
ஓவல் மைதானம் இன்று புதிய ஆடுகளம் ஒன்றை இறுதிப்போட்டிக்காக தயார் செய்திருப்பதாகத் தகவல். இதனால் ஆரம்பத்தில் கொஞ்சம் வேகப்பந்துவீச்சாளருக்கு துணை செய்தாலும், 300 ஓட்டங்களுக்கு மேல் பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மிஸ்பா, யூனிஸ் கான், அப்ரிடி ஆகியோரின் ஓய்வுகளால் புதிதாக மாற எத்தனிக்கும், சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகமும் சேர்ந்த பாகிஸ்தானுக்கு இன்றைய வெற்றி மிகப்பெரிய எழுச்சியாக அமையும்.
இந்தியாவோ இன்று மீண்டும் வென்றால் உலகின் மிகச் சிறந்த ஒருநாள் அணியாகத் தன்னை தரப்படுத்தலிலும் சேர்த்து நிரூபிக்கும்.

இன்றைய போட்டி சில புதிய நட்சத்திரங்களையும் தரலாம்.
இந்தத் தொடரில் இதுவரை பிரகாசித்துள்ள தவான், கோலி, ரோஹித் ஷர்மா, ஃபக்கார் சமான், ஹசன் அலி, அசார் அலி, ஜுனைத் கான் ஆகியோரையும் இன்றும் கவனியுங்கள்.

இங்கிலாந்தில் நடந்தாலும் ஆசிய மைதானம் போல இந்திய – பாகிஸ்தானிய ரசிகர்களால் மாறப்போகும் ஓவல் இரு அணிகளுக்குமே சொந்த நாடுகளில் விளையாடும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

மொத்தத்தில் எமக்கு உற்சாகமான இறுதிப்போட்டி தான்.
இரு அணியும் விட்டுக்கொடுக்காமல் விளையாடி எம்மை ஏமாற்றாமல் ரசிக்கச் செய்தால் சரி.