இராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்

0
367

(Chundukuli student Krishanthi Memorial Day)

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருஷாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் குறித்த நினைவுகூரல் நடைபெற்றது.

இந்த நினைவு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய அதேவேளை, வடமாகாண சபை அமைச்சரான அனந்தி சசிதரன் மற்றும் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவருடைய தாயார் குமாரசாமி இராசம்மாள், அவருடைய சகோதரர் பிரணவன் குமாரசாமி மற்றும் அயல்வீட்டவர் உள்ளிட்ட செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சகலருக்குமாக 21 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ். செம்மணி பகுதியில் கிருஷாந்தி படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் நினைவு கூரப்பட்டது.

இதன்போது, 21 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 60 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

1996 ஆம் புரட்டாதி மாதம் 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டிக்குளி கல்லூரி மாணவியான கிருஷாந்தி தனது 18 வயதில் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்துப் படுகொலை செய்திருந்தனர்.

செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை அயலவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனான யாழ். பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35) ஆகியோர் மாணவியை தேடி சென்றனர்.

இவர்கள் செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை, அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர்.

அதேவேளை, யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட 600 பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

<<More Top News>>

Our Other Websites :

Tags; Chundukuli student Krishanthi Memorial Day

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here