அக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்

0
404

(Public difficulty Agarapathana)

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் 06 இலக்க தோட்டத் தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு பகுதியில் ஐந்து வீடுகள் தாழிறங்கியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையினால் ஐந்து வீடுகள் தாழிறங்கியுள்ளதால் அங்கு வாழ்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அருகிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்கு வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95 பேர் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குறித்த பிரதேசத்தில் வசிப்போர் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குடியிருப்புக்களில் உள்ள சுமார் 05 க்கும் மேற்பட்ட வீடுகளில் பாரியளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாகவே ஐந்து குடும்பங்களை வெளியேறுமாறு தோட்ட நிர்வாகமும், கிராம சேவகரும் அறிவித்திருந்தனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கிராம சேவகரினால் வழங்கப்பட்டு வருகின்றன.

1926 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்பு கடந்த காலங்களில் எந்தவித புனர்நிர்மானமும் செய்யப்படாத நிலையில் காணப்படுவாகவும் அப்பிரதேச மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால், மழைக்காலங்களில் வீட்டின் கூரையில் இருந்தும், பூமியில் இருந்தும் மழைநீர் கசிந்து வருவதாகவும் மழைநீர் காரணமாக தூக்கமின்றி பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த மழைநீர் மற்றும் நீர்கசிவு காரணமாக இக்குடியிருப்பு தாழ்ந்துள்ளதாகவும் இத்தாழ்வு காரணமாக தமது குடியிருப்புக்களுக்கும் உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து எற்பட்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தோட்டத் நிர்வாகத்திடமும் அரசியல்வாதிகளிடமும் தெரிவித்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆபத்தான நிலையிலுள்ள தமது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்ற உதவுமாறும் இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தாழிறக்கம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில் மின்சார வசதியோ, மலசலகூட வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது.

இதனால் கைக்குழந்தைகளுடன் உள்ள தாய்மார்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாது மிகவும் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இதுகுறித்து உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<<More Top News>>

Our Other Websites :

Tags; Public difficulty Agarapathana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here